சடலம் போல வேடமடைந்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை பணி நீக்கப்பட்ட ஊழியர்கள்..
புதுச்சேரி, பொதுப்பணித்துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், தேர்தல்துறை மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார். ஆனால் இதுவரை அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.இதனையடுத்து அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் பணி நீக்கப்பட்ட ஊழியர்கள் சடலம் போல வேடமணிந்து,முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 100கும் மேற்பட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments